சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கண்டிப்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியே ஆகவேண்டும். திரும்ப அனுப்புவதற்கான வாய்ப்பில்லை. சரியான காரணங்கள் ஏற்கெனவே உள்ளடக்கிய சட்டமுன்வடிவுதான். அதை அவர் திரும்ப அனுப்பியது என்பதே ஒரு சரியான நடவடிக்கை அல்ல என்பது நேற்று அனைத்துக்கட்சித் தலைவர்களுமே சட்டமன்றத்தில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஏற்கெனவே அவர் திரும்ப அனுப்பியதற்கான காரணங்களுக்கெல்லாம், மிகச் சரியான பதிலை நேற்றைய உரையில் தெரிவித்திருக்கிறார். நிச்சயம் இந்த முறை ஆளுநர் இதனை திரும்ப அனுப்புவதற்கான வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மட்டுமே 70 சதவீதம் இறப்பை நோக்கிச் செல்வது தரவுகளிலும், கரோனா தடுப்பூசி செலுத்தியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது ஆய்வுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திய இலக்கை அடைவோம்" என்று கூறினார். இந்தச் சந்திப்பின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.