கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சியில், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய இடத்தில், திமுகவின் வார்டு செயலாளர் போட்டியிட்டதால், கடைசி நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றார்.
கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக கூட்டணியில் உள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 இடங்களை கேட்டது. ஐந்து கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், திமுகவினரோ 1 இடத்தை மட்டுமே ஒதுக்கினர். இதையடுத்து அந்த ஒரு இடத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான மு.அ.பாரதிமுருகன் 7-வது வார்டில் போட்டியிட முடிவு செய்தார்.
அதன்படி பாரதிமுருகன் தனது வேட்புமனுவை 4-ம் தேதி தாக்கல் செய்யும் போது, வார்டு திமுக செயலாளரை அனுப்பி உதவுமாறு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரத்திடம் கூறியுள்ளார். வார்டு செயலாளருக்கு பதில், நானே வருகிறேன் எனக் கூறி வேட்புமனு தாக்கல் செய்யும் போது பாரதிமுருகனோடு, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரமும் உடனிருந்தார்.
இதையடுத்து வார்டு திமுக செயலாளர் ரமேஷ்குமாரும் 4-ம் தேதி தனது வேட்புமனுவை சுயேட்சையாக தாக்கல் செய்தார். ரமேஷ்குமார் தாக்கல் செய்திருப்பதால், தேர்தலில் திமுகவினர் ஒத்துழைக்க மாட்டார்கள் எனக்கருதி பாரதிமுருகன், திமுகவினரான மாவட்ட செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்டோரிடம் முறையிட்டார். ஆனாலும் எந்த பலனும் இல்லை.
இதையடுத்து 7-ம் தேதி மாநில செயலாளர் இரா.முத்தரசன் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றதும், திமுகவினர் ஒத்துழைப்பு தரவில்லை என்றால், அந்த ஒரு இடத்தையும் அவர்களிடமே திருப்பி கொடுத்து விடுங்கள் எனக்கூறியதை அடுத்து, பாரதிமுருகன் தனது மனுவை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றார்.
திமுகவின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், மன்னார்குடி முன்னாள் எம்எல்ஏவுமான மன்னை மு.அம்பிகாபதியின் மகன் தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதிமுருகன்.
கருணாநிதியின் நண்பரின் மனுக்கே திமுகவினர் செய்த துரோகத்தால் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், திமுகவின் மீது அதிருப்தியில் உள்ளனர்.