திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்பட 7 கட்சிகளுக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர தினமும் பல்வேறு ஜாதி, மதம், சமூக அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மகாதலித் கூட்டமைப்பில் உள்ள அருந்ததியர் பெண்கள் எழுச்சி இயக்கம், அருந்ததியர் மக்கள் கட்சி, ஐக்கிய முற்போக்கு திராவிட கழகம், தலித் சேனா, மதுரை வீரன் மக்கள் கூட்டமைப்பு, இயற்கை மக்கள் மருத்துவ இயக்கம், ஆதிதமிழர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட 22 அமைப்புகள், தமிழ் மாநில தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பில் உள்ள 11 அமைப்புகள் உள்ளிட்ட 49 அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதுவரை 350-க்கும் அதிகமான அமைப்புகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.