எஸ்ஆர்ஜிஎஸ் மோகன்தாஸ். படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

அரை நூற்றாண்டு காலமாக இசைமழை பொழியும் நாகஸ்வர வித்வான் மோகன்தாஸ்

மு.யுவராஜ்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தோம். காற்றோடு கலந்து வந்த மங்களகரமான நாகஸ்வரம் இசை வரவேற்றது. கோயில் கொடிமரம் அருகே செம்பனார்கோயில் எஸ்ஆர்ஜிஎஸ் மோகன்தாஸ், நாகஸ்வரத்தை வாசித்து கொண்டிருந்தார். அந்த தெய்வீக இசை கேட்போரை மெய்மறக்கச் செய்தது.

நாகஸ்வர இசைக் கலைஞர் எஸ்ஆர்ஜிஎஸ் மோகன்தாஸ் குறித்து விசாரித்தபோது, செம்பனார்கோயில் பரம்பரையில் இவர் 21-வது தலைமுறை என்பது தெரியவந்தது. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் (44 ஆண்டு) நாகஸ்வர இசைக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்த மோகன்தாஸிடம் பேச முற்பட்டோம். புன்முறுவலோடு வரவேற்று அமர வைத்தார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

எந்த வயதில் இருந்து நாகஸ்வரத்தை வாசித்து வருகிறீர்கள்?

நாகஸ்வர உலகத்தில் செம்பனார்கோயில் பரம்பரை மிகப் பெரிய பாரம்பரியம் கொண்டது. எங்கள் பரம்பரையில் 21-வது தலைமுறையாக நான் நாகஸ்வரத்தை வாசித்து வருகிறேன். பூர்வீகம் செம்பனார்கோயில். நான் பிறந்து வளர்ந்தது மயிலாடுதுறை. 11-வது வயதில் நாகஸ்வரத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரே ஆண்டில் நாகஸ்வரத்தைக் கற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டேன். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தி உள்ளேன்.என்னுடைய இசையை பாராட்டி ‘கோகில கானஇசை செல்வர்’ உள்ளிட்ட பல பட்டங்களை கொடுத்துள்ளனர்.

உங்களுடைய குரு...

என் தந்தை செம்பனார்கோயில் எஸ்ஆர்ஜி சம்பந்தம்தான் என்னுடைய முதல் குரு. என் தந்தைக்கு கலைமாமணி விருது கடந்த 1980-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. தொழில் பக்தி, அவற்றின் மீதான பற்றுகளை அவரிடம் இருந்துதான் கற்று கொண்டேன்.

இத்தனை ஆண்டுகாலத்தில் உங்க ளது மறக்க முடியாத அனுபவம்...

நான் நாகஸ்வரம் கற்று தொழிலுக்கு நுழைந்தவுடன் தமிழ் இசைச் சங்கம், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சியில் விழா நடத்தினார்கள். இவ்விழாவில் கச்சேரி நடத்திய என்தந்தை என்னையும் அழைத்து சென்றிருந்தார். விழா கடைசியில் என் தந்தை என்னைநாகஸ்வரத்தை வாசிக்க வைத்தார். நான் வாசித்து முடித்தவுடன், விழா ஏற்பாடு செய்த பொள்ளாச்சி வெள்ளையப்பன் செட்டியார் ரூ.11 சன்மானமாக கொடுத்து 'புலிக்கு பிறந்தது பூனையாகுமா?’ என்றுகூறினார். அது என் வாழ்நாளில் மறக் கவே முடியாது.

நாகஸ்வரம் தொழிலுக்கு வரும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்பு வது...

இசைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்தபிறகு இளைஞர்கள் நேரடியாக தொழிலுக்கு சென்றுவிடுகின்றனர். அது அடிப்படையை தெரிந்து கொள்ளத்தான் உதவும். எனவே, இசைப் பள்ளியில் படித்துமுடித்த பிறகு, அனுபவம் வாய்ந்த வித்வான்களை குருவாக ஏற்று இளைஞர்கள் கற்று தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் இளைஞர்கள் போதிய அனுபவத்தைப் பெற முடியும். இதனை பணம் சம்பாதிக்கும் தொழிலாகக் கருத கூடாது. இத்தொழிலை உயிர் மூச்சாக நினைத்து இளைஞர்கள் வர வேண்டும்.

கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது நாதஸ்வரம் தொழிலின் தற்போதைய நிலை...

25 ஆண்டுகளுக்கு முன்பு வித்வான்கள் மீது மனப்பூர்வமாக மரியாதை வைத்திருந்தனர். ஆனால், தற்போது உதட்டளவில்தான் உள்ளது. அந்த காலத்தில் நாகஸ்வர கச்சேரிகளில் 50 சதவீதம் தொழில் தெரிந்தவர்களும் 50 சதவீதம்பாமர மக்களும் இருப்பர். ஆனால், அந்த பாமர மக்களுக்கும் நாகஸ்வர இசையின் கேள்வி ஞானம் இருந்தது. அவர்களே எந்த ராகத்தை இசைக்கிறோம் என்பதை சரியாக கூறுவார்கள். தற்போது, அப்படி கிடையாது.

கலைஞர்களுக்கு அரசு அங்கீகாரம் உரிய முறையில் கிடைக்கிறதா?

மத்திய, மாநில அரசு விருதுகளை வழங்குவதற்கு தலைசிறந்த கலைஞர்களை உள்ளடக்கிய கமிட்டி அமைத்து தகுதியான, திறமையான இசைக் கலைஞர்களை கண்டுபிடித்து அவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முறையை மாற்றி தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்பு கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு பயணம் செய்வதற்கு ஏசி பெட்டியில் ரயில் டிக்கெட், தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதியும் அரசு செய்து கொடுக்கும். விருது வழங்கிய நாளன்று மாலை, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுத்து ஆளுநர் கவுரவப்படுத்துவார். அந்த நடைமுறை தற்போது இல்லை. இதை அரசு மீண்டும் நடைமுறைப்படுத்தினால் கலை புத்துயிர் பெறும்.

கடந்த காலங்களில் தமிழக அரசு சார்பில் வித்வான்களுக்கு ‘அரசவைக் கலைஞர்' என்று பட்டம் அளித்து வில்லிபுத்தூர் கோபுரம் பதிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கப்படும். அதன்பிறகு, ஓர் ஆண்டுக்கு அரசு நிகழ்ச்சிகளில் அரசவைக் கலைஞர் பட்டம் பெற்றவர்தான் வாசிப்பார். அதுபோன்று மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து அரசு விழாக்களிலும் மங்கள இசை வாசிக்கப்படுவதை கட்டாயப்படுத்த வேண்டும்.

நாகஸ்வரம் வித்வான்களின் வாழ்க் கைத் தரம் உயர அரசுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கைகள்...

கோயில்களில் பணியாற்றும் வித்வான்களுக்கு குடும்பத்தை நடத்தும் அளவுக்குக் கூட சம்பளம் கொடுப்பதில்லை. எனவே, சம்பளத்தை உயர்த்தி வழங்கவேண்டும். கோயில்களில் உள்ள நாகஸ்வரம், தவுல் உள்ளிட்ட கலைஞர்கள் காலிபணியிடங்களை தமிழக அரசு நிரப்பி வருகிறது. தற்காலிக பணியிடங்களில் உள்ள கலைஞர்களை பணி நிரந்தரம் செய்து வருகிறது. இதற்காக, தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணியை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT