திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 18.9.15 அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஏற்கெனவே விஷ்ணுபிரியாவின் தந்தை எம்.ரவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த 1.12.15-ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து எம்.ரவி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிகோத்ரி, வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடந்தது.
தமிழக அரசு சார்பில் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘டிஎஸ்பி விஷ்ணுபிரியா இறப்பு குறித்து நேர்மையான விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸுக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ-யில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த திறமையான அதிகாரிகள்தான் சிபிசிஐடி-யில் உள்ளனர். சிபிசிஐடி-யில் உள்ளவர்கள் இதுவரை எவ்வித தலையீடோ, குறுக்கீடோ இல்லா மல் நேர்மையாக விசாரணை நடத்தி யுள்ளனர். எனவே சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.
அதற்கு, பதில்மனு தாக்கல் செய்த விஷ்ணுபிரியா தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘ஏற்கெனவே தனி நீதிபதி, நாங்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் எதையுமே பார்வையிடாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. எனவே இந்த வழக்கில் தொடர் புடைய அனைத்து ஆவணங்களையும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து மட்டுமல்லாமல், தயார் நிலையிலும் வைக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.