கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிப்பவர் எச்.எஸ்.ஆனந்த் சிங் என்ற டோனி சிங். பஞ்சாப் மாநி லத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், கோவை மாநகராட்சியின் 71-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுகிறார். மனுதாக்கல் முடிந்த கையோடு, தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.
இதுதொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் ஆனந்த் சிங் கூறியதாவது: நான் பிறந்தது பஞ்சாப் மாநிலம். 1960-ம் ஆண்டில் எனது 4 வயதிலேயே பெற்றோருடன் கோவைக்கு வந்து விட்டேன். இங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதோடு, மின் விளக்குகள் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளேன். நான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் கலாச்சாரத்தில், பண்பாட்டில் கலந்து விட்டேன். என்னை டோனி சிங் எனவும், பஞ்சாப் தமிழர் என்றும் அழைக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு பேரவையின் ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து 4 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்தியுள்ளேன். கரோனா காலத்தில் ஒரு லட்சம் முகக்கவசங்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளேன். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கியுள்ளேன். எனது வார்டில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்ய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.
திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் எனது பள்ளிக்கால நண்பர். நடிகர் நிழல்கள் ரவி எனது கல்லூரி நண்பர். இவர்கள் எனக்காக பொதுமக்களிடம் வாக்குகேட்டு பிரச்சார வீடியோ வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.