சென்னையில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் முத்தழகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி.படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

வேளாண் சட்டத்தை போல நீட் தேர்வும் திரும்ப பெறப்படும்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: வேளாண் சட்டத்தைப்போல நீட் தேர்வும் திரும்பப் பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 170-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஏ.முத்தழகனை ஆதரித்து வரதாபுரம் பகுதியில் கே.எஸ்.அழகிரி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் கூட்டணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றாக வழிநடத்துகிறார். இது கொள்கைக்காக, ஜனநாயக ரீதியில் போராடும் கூட்டணி. மனிதர்களை மொழி, சாதி போன்றவற்றால் பிரித்துப் பார்க்கக் கூடாது. இந்தியாவில் உள்ளவர்களை இந்தியராகவும், தமிழகத்தில் இருப்பவர்களை தமிழராகவும் பார்க்க வேண்டும்.

பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளன. அரசியலுக்காக நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கவில்லை. தமிழக மாணவர் நலனுக்காகவே நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

நீட் தேர்வுக்கான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன. தமிழகத்தில் மாநில பாடத் திட்டம்தான் அமலில் உள்ளது. இந்த பாடத் திட்டத்தில்தான் பெரும்பாலான மாணவர்கள் படிக்கின்றனர். எனவேதான், நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஓராண்டு போராடினர். அதன் விளைவாக வேளாண் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதேபோல, நீட் தேர்வையும் தமிழகத்தில் இருந்து திரும்பப் பெறும் சூழ்நிலை ஏற்படும். அதுவரை திமுக கூட்டணிக் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT