செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்று பாலம் சீரமைப்புப் பணிகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 
தமிழகம்

செங்கல்பட்டு பாலாற்று பாலம் சீரமைப்பு பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம் குறித்து ஆட்சியர், எஸ்பி ஆய்வு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் பாலாற்றின் மீது சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுள்ள பாலம் அமைந்துள்ளது. சென்னை- திருச்சி மார்க்கத்தில் பாலாற்றைக் கடக்க 1955-ம் ஆண்டுஇப்பாலம் கட்டப்பட்டது. இப்பாலம்பழுதடைந்துள்ளதால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இதன் காரணமாக சென்னை -திருச்சி மார்க்கத்தில் பாலத்தின் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலம் மூடப்பட்டது. அதேசமயம் திருச்சி- சென்னை மார்க்கத்தில் அமைந்துள்ள ஒரே பாலத்தின் மீது இருவழிகளிலும் போக்குவரத்து செல்லும் விதமாக போக்குவரத்து மாற்றப்பட்டது. இதன் காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாகக் கனரக வாகனங்கள் படாளம் மற்றும் புக்கத்துறை கூட்டுரோட்டிலிருந்து பழைய சீவரம் வழியாகச் சென்னை செல்லவும், இலகுரக வாகனங்கள் மெய்யூர், பிலாபூர், பழத்தோட்டம், காஞ்சிபுரம் சாலை, செங்கல்பட்டு வழியாகச் செல்லவும், சில வாகனங்கள் கருங்குழி வழியாகத் திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம் வழியாகச் சென்னை செல்லவும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலத்தைச் சீரமைக்க ஒரு மாத காலம் ஆகும் என்பதால், வாகன ஓட்டிகள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பாலம் சீரமைப்புப் பணி மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்துசெங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சென்னை வருவோர் கவனத்துக்கு

விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வரும்வாகன ஓட்டுநர்கள் திண்டி வனத்துக்கு 10 கி.மீ. முன்னதாகவே கூட்டேரிப்பட்டு, வெள்ளிமேடு பேட்டை, வந்தவாசி,காஞ்சிபுரம் வழியாகச் செல்ல லாம்.அல்லது காஞ்சிபுரம் செல்லாமல் முன்னதாக செவிலிமேடு, வாலாஜாபாத், தாம்பரம் வழியாகச் சென்னை செல்லலாம் என்று நெடுஞ்சாலைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT