மறைமலை நகர்: மறைமலைநகர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகளுக்கு ஓர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்தென்னவன் போட்டியிடுகிறார்.
இங்கு அதிமுக சார்பில் முன்னாள் தலைவர் க.கோபிகண்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மு.தினேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் அதிமுக வேட்பாளர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து வேட்பாளர் தே.தென்னவன் கூறியதாவது: எங்களுக்கு வழங்கப்பட்ட 10-வது வார்டில் முன்னாள் நகரமன்ற தலைவர் அதிமுகவைச் சேர்ந்த கோபி கண்ணன் போட்டியிடுகிறார். இவர் மிகுந்த வசதி படைத்தவர் என்பதால் இவரை வெற்றி கொள்ள கடுமையாக போராட வேண்டியுள்ளது.
இந்த வார்டில் வெற்றிபெற உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே முடியும். மேலும் திமுக நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டால் மட்டுமே எங்களுக்கு முழு ஆதரவு தருவார்கள். இதனால் திமுகவின் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்றார்.