சாந்திஸ்ரீ 
தமிழகம்

ஜேஎன்யு பல்கலை. துணைவேந்தர் சாந்திஸ்ரீ சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர்: கல்லூரி முதல்வர் ராமன் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச அளவில் புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) முதல்பெண் துணைவேந்தராக பேராசிரியை சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவி என்பது தெரியவந்துள்ளது. இதனால், மாநிலக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர்.ராமன் கூறியதாவது: உலகப் புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, அதுவும் முதல் பெண் துணைவேந்தராக எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறோம். ஒட்டுமொத்த கல்லூரியே இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

சாந்தி எங்கள் கல்லூரியில் கடந்த 1980-83 ஆண்டில் பி.ஏ. வரலாறு பட்டமும், 1983-85 ஆண்டில் எம்.ஏ. அரசியல் அறிவியல் பட்டமும் பெற்றவர். அந்த காலகட்டத்தில் அவருக்கு இளங்கலை படிப்பில் பேராசிரியர் தனுஷ்கோடி வரலாறு பாடமும், பேராசிரியர் சிதம்பர குமாரசாமி ஆங்கிலப் பாடமும், முதுகலை படிப்பில் பேராசிரியை லலிதா லட்சுமி, துறைத் தலைவர் அம்சபிரியா ஆகியோர் அரசியல் அறிவியல் பாடமும் எடுத்துள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன். எஸ்.சந்திரசேகர், தமிழ் அறிஞர் உவேசா, ஜெனரல் கரியப்பா, முதல் பெண் ஐஎஃப்எஸ் அதிகாரி சி.வி.முத்தம்மா, நீதிபதி எம்.எம்.இஸ்மாயில், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி, அரசியல் தலைவர்கள் ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், ஏன் இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் என புகழ்பெற்ற பல தலைவர்களும் எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்களே. அந்த வரிசையில் இன்னொரு முன்னாள் மாணவியான சாந்தியால் எங்கள் கல்லூரிக்கு இன்னொரு கவுரவம் கிடைத்துள்ளது. கல்லூரி பட்டமளிப்பு விழா அல்லது மிகப்பெரிய விழாவில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT