பாஜக மேலிட பொறுப்பாளர்கள் அறிவுறுத்தல் படி அதிருப்தி சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆளு நர் தமிழிசையை சந்தித்தனர்.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமை யில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் என்ஆர் காங்கிரஸைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், பாஜகவைச் சேர்ந்த2 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். பேரவைத்தலைவர், நாடாளுமன்ற செயலர் ஆகிய பதவி களில் பாஜகவும், பேரவை துணைத்தலைவர், அரசு கொறடா பதவிகளில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் இடம் பெற்றுள்ளனர். பதவிகளில் இடம் பெறாத என்ஆர் காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களுக்கு வாரிய பதவி வேண்டும் என கேட்டு வந்தனர்.
இதனிடையே ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அமையும்போது சுயேச்சையாக வெற்றிபெற்ற 6 எம்எல்ஏக்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகிய 3 பேர் தாமாக முன்வந்து பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். இதற்கான கடிதத்தையும் பாஜகவிடம் அளித்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் வாரியத் தலைவர் பதவி உட்பட சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியும் என்ஆர் காங்கிரஸ், பாஜக, ஆதரவு எம்எல்ஏக்களுக்கு வாரிய பதவி வழங்கப்படவில்லை.
அதேநேரத்தில் அமைச்சர் நமச்சிவாயத்துக்குமட்டும் பிப்டிக் தலைவர் பதவி தரப்பட்டது. இதையடுத்து பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள்முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதால் வாரியத் தலைவர் பதவி தர அவர் மறுத்துவிட்டார். இதில் அதிருப்தி அடைந்த ஆதரவு சுயேச்சைஎம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை திரும்பபெற முடிவு எடுத்தனர். பாஜக தரப்பில் சமாதா னப்படுத்த தொடங்கினர். பேரவைத்தலைவர் செல்வத்தை 3 எம்எல்ஏக்களும் சந்தித்து பேசினர். பாஜவுக்கு ஆதரவு அளிப்பதால், என்ஆர் காங்கிரஸ் அரசு, தங்கள் தொகுதியில் திட்டங்களை நிறைவேற்றாமல் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பாஜக மேலிடத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அதி ருப்தி சுயேச்சை எம்எல்ஏக்களிடம் பேசினர். ஆளுநரை சந்திக்குமாறு குறிப்பிட்டதை அடுத்துநேற்று பிற்பகல் 3 அதிருப்தி சுயேச்சை எம்எல்ஏக்களும் ராஜ்நிவாஸ் புறப்பட்டனர். அப்போது திடீரென்று சுயேச்சைகளில் ஒருவரான அங்காளன் சட்டப்பேரவைக்கு சென்றார்.அவரை மற்ற இரு எம்எல்ஏக்கள் அழைத்த போது செல்போனை எடுக்கவில்லை. இதனால் இருவர் மட்டும் ராஜ்நிவாஸ் சென்று ஆளுநர் தமிழிசையை சந்தித்தனர்.
இச்சந்திப்புக்கு பிறகு சுயேச்சை எம்எல்ஏக்கள் சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் கூறுகையில், “பாஜக தலைமையிலிருந்து மேலிடப் பொறுப்பாளர்கள், மத்திய அமைச்சர்கள் எங்களிடம் பேசினர். அவர்கள் ஆளுநரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தனர். ஆளுநரை சந்தித்து தொகுதி பிரச்சினைகளை தெரிவித்தோம். தொகுதிக்கு தேவையானவற்றை எழுதித்தர கோரினார். அனைத்தையும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். மேலிடப் பொறுப்பாளர், மத்திய அமைச்சர் ஆகியோர் புதுச்சேரிக்கு புதன்கிழமை (இன்று) வருவதால், நேரில் பேசி தீர்வு காண்பதாகவும் குறிப்பிட்டனர். இதனால் பாஜகவின் ஆதரவை விலக்கும் எண்ணமில்லை. எம்எல்ஏ அங்காளன் எங்களுடன் தான் வந்திருந்தார். இறுதியில் ஆளுநரை சந்திக்கும்போது வராதது ஏன் என்று தெரியவில்லை” என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பேச அங்காளன் எம்எல்ஏவை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.