சென்னையில் ஆடிட்டர் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரை விடுதலை செய்து சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதா கிருஷ்ணனை 2002-ல் மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட் டினர். இதில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, வீட்டு உதவியாளர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவி சுப்பிரமணியம், அப்பு, கதிரவன், மீனாட்சிசுந்தரம், ஆனந்த், கண்ணன் உள்ளிட் டோரை கைது செய்தனர். இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார்.
55 பேர் சாட்சியம்
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின்போது, கதிரவன், அப்பு இறந்துவிட்டனர். ஜெயேந்திரர் உட்பட 9 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் 55 பேர் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 28-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை யடுத்து, ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும் சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
80 கேள்விகள்
அப்போது, போலீஸ் தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் ஜெயேந்திரரிடம் 80-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் பல கேள்வி களுக்கு ‘தெரியாது’, ‘சரியானது அல்ல’, ‘பொய்’ என ஜெயேந்திரர் பதில் அளித்தார். அந்த பதில்களை நீதிபதி ராஜமாணிக்கம் பதிவு செய்து கொண்டார். சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்டவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டன.
இதைத் தொடர்ந்து, முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இந்த வழக்கு கடந்த 25-ம் தேதி விசா ரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயராஜும், ஜெயேந்திரர் உள் ளிட்டோர் சார்பில் வழக்கறிஞர்கள் வெங்கட்ராமன், கே.எம்.சுப்பிர மணியன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வழக் கறிஞர்களின் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 29-ம் தேதி (நேற்று) தீர்ப்பு கூறுவதாக நீதிபதி ராஜமாணிக்கம் அறிவித்தார்.
பலத்த பாதுகாப்பு
முக்கிய வழக்கின் தீர்ப்பு என்பதால், நீதிமன்ற வளாகத் திலும், நீதிமன்றத்துக்கு வெளியே யும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும், அப்ரூவர் ரவி சுப்பிரமணியமும் மதியம் 1.50 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதி மன்ற அறையில் ஜெயேந்திரருக் காக போடப்பட்டிருந்த தனி இருக்கையில் அவர் அமர்ந்தார்.
நீதிபதி ராஜமாணிக்கம் மதியம் 2 மணி அளவில் தீர்ப்பு கூறினார். ‘‘ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. எனவே, ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன். அப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியம் மீதான வழக்கை தனியாக விசாரிக்க உத்தரவிடுகிறேன்’’ என்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஜெயேந்திரரை காண வழக்கறிஞர்கள், பார்வை யாளர்கள் அதிக அளவில் குவிந் திருந்தனர். செய்தியாளர்களும் அதிக அளவில் திரண்டிருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தீர்ப்பு குறித்து ஆடிட்டர் ராதா கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ‘‘குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. அதுகுறித்து நான் என்ன கருத்து கூறமுடியும். இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.