புதுச்சேரி: புதுச்சேரியில் காவலர் காலி பணியிடங்களில் பெண்களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வு வரும் 11-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடக்கிறது. முதல் நாளில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீஷியன், 29 டெக் ஹேண்ட்லர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணிகளுக்காக விண்ணப் பித்தவர்களில் 14 ஆயிரத்து 787 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 19-ம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது.
ஆண்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, எடை, மார்பளவு, ஓடடப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுவரை ஆண்களில் 1,744 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெண்களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. வரும் 11-ம் தேதி வரை 5 நாட்கள் பெண்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வில் பங்கேற்ற பெண்களுக்கு முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
பின்னர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவை நடத்தப்பட்டது. முதல் நாள் தேர்வில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.