நாகப்பட்டினம்: சுனாமி பேரலை பாதிப்பின்போது, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மகளின் திருமண விழா நேற்று நாகையில் நடைபெற்றது.
2004 டிச.26-ல் நேரிட்ட சுனாமி பேரலை தாக்குதலால், தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக, சுனாமியால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டத்தில் மட்டும் 6,065 பேர் உயிரிழந்தனர். இதனால், ஏராளமான குழந்தைகள் தாய் அல்லது தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்து ஆதரவற்றவர்களாகினர்.
அப்போது, நாகை சாமந்தான்பேட்டையில் அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்யா காப்பகத்தில், தாய் அல்லது தந்தையை இழந்த 99 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டனர். அவர்களில், 3 வயது குழந்தையான சவுமியா, 2 வயது குழந்தையான மீனா ஆகிய 2 குழந்தைகளை அப்போதைய நாகை ஆட்சியரும், தற்போதைய சுகாதாரத் துறை செயலருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து, அவர்களின் பராமரிப்புக்கு பொறுப்பேற்றார்.
பின்னர், அவர் சென்னைக்கு பணிமாறுதலில் சென்றாலும், ஒவ்வொரு மாதமும் நாகைக்கு வந்து 2 குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டதுடன், அவர்களுடைய கல்வியிலும் அதிக பங்களிப்பை செலுத்தி, பராமரித்து வந்தார். தொடர்ந்து, சவுமியா, மீனா ஆகியோருக்கு 18 வயது கடந்ததும், அவர்கள் இருவரையும் நாகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும் மலர்விழி- மணிவண்ணன் தம்பதி தத்தெடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில், தற்போது பி.ஏ படித்து முடித்துள்ள சவுமியாவுக்கும், திருப்பூரைச் சேர்ந்த காசிமாயன், அன்னபெருமாயி தம்பதி மகன் கே.சுபாஷ் என்பவருக்கும் நாகை ஆபீசர்ஸ் கிளப்பில்சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று திருமணம் நடைபெற்றது. விழாவில், நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ், எஸ்.பி ஜவஹர் மற்றும் நாகையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.
விழாவில், பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டு பேசிய சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், “மனிதநேயம் மட்டும்தான் இதுநாள் வரை நிலைத்து நிற்கிறது” என்று கூறினார்.
இந்த திருமணம் குறித்து மணப்பெண் சவுமியா கூறியபோது, “அனைவரின் ஆதரவிலும் வளர்ந்த எனக்கு திருமணம் நடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு தந்தையாக, பாதுகாவலராக இருந்து வளர்த்தவர் ராதாகிருஷ்ணன் அப்பா தான்” என்றார். “பாதுகாவலராக இருந்து குழந்தையை வளர்த்தாலும், பெற்ற மகளைப் போலவே மணம் செய்து வைத்திருக்கிறோம்” என சவுமியாவின் வளர்ப்பு பெற்றோர் கூறினர்.