குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மலை ரயில் பாதையில் யானை வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச் சுவர்களை இடிக்க, வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையில் கடந்த ஒரு வாரமாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் உலா வருகின்றன. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீருக்காக தண்டவாளத்தை கடந்து செல்கின்றன. சமீபத்தில் ஹில்குரோவ் ரயில் நிலையப் பகுதிக்கு வந்த யானைகள், ரயில்வே துறையினர் தடுப்புச் சுவர் கட்டியுள்ளதால், கடந்து செல்ல முடியாமல் தவித்தன. இதுபற்றி வனத்துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.
டிராலிகளில் சென்று ஆய்வு
இந்நிலையில், குன்னூர் முதல் கல்லாறு வரை யானை வழித்தடங்கள் மற்றும் யானைகள் கடந்து செல்லும் பாதைகளில் உள்ள தடுப்புச் சுவர்கள் குறித்து கணக்கெடுக்க, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தலைமையில், நீலகிரி வனப்பாதுகாவலர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர்கள் சச்சின் துக்காராம், அசோக்குமார் (கோவை), குன்னூர் வனச்சரகர் சசிகுமார், சேலம் கோட்ட ரயில்வே பொறியாளர் சுப்ரமணியம், குன்னூர் பிரிவு பொறியாளர் விவேக் ஆகியோர் 3 டிராலிகள் மூலமாக சென்று நேற்று முன்தினம் மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் யானை வழித்தடத்தை மறித்து ரயில்வே துறையினர் தடுப்புச் சுவர்கள் கட்டியிருப்பது தெரியவந்தது. அவற்றை இடிக்க வனத்துறையினர் உத்தரவிட்டனர். விரைவில் இடிக்கும் பணியில் ஈடுபடுவதாக, ரயில்வே துறையினர் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “யானை சென்றுவரும் இடங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் தடுப்புச் சுவர்களை கட்ட அறிவுறுத்தி உள்ளோம்” என்றனர்.