புதுச்சேரியில் பேனர், கட்அவுட்கள் வைக்கப் படுவது தொடர் கதையாகிவிட்டது. முக்கிய சாலை சந்திப்புகள், சென்டர் மீடியன்கள், தலைவர்களின் சிலைகள், சிக்னல்கள் போன்ற இடங்களை மறைக்கும் அளவுக்கு பிரமாண்டமான பேனர், கட் அவுட்கள் வைக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகள் நடப்பதுடன், நகரின் அழகும் சீர்குலைகிறது.
பேனர்களை எதிர்தரப்பினர் கிழிக்கும்போது, இரு தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டு அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. சம்பிரதாயத்திற்காக அதிகாரிகள் பேனர்களை அகற்றுவதும், அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த ஆட்சிகாலத்தில் உள்ளாட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறையால் அங்கீகரிக் கப்பட்ட இடங்களில் மட்டுமே பேனர்களை வைக்க வேண்டும்.
அதேபோல் உயிரோடு இருப்பவர்களின் படத்துடன் பேனர்களை வைப்பது இனி கூடாது உள்ளிட்ட உயர்நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும், பேனர் கலாச்சாரம் தொடர்கிறது.
குறிப்பாக இந்திரா காந்தி சிலை, ராஜிவ் காந்தி சிலைகளை சுற்றிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் எதிரெதிர் திசையில் வருகின்ற வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் விபத்து ஏற்படும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
கோரிமேடு சாலை, வழுதாவூர் சாலை, லாஸ்பேட்டை சாலை, இசிஆர் உள்ளிட்ட சாலையோரங்களிலும், சாலையின் தடுப்பு கட்டைகளிலும் ஏராளமான பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. இதனால் அந்த சாலைகளில் செல்வோரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் உள்ளது.
பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேனர்கள் வைப்பதால் பல்வேறு பாதிப் புகளை சந்திக்கிறோம். ஆகவே, அரசு இதில் கவனம் செலுத்தி பேனர் தடை சட்டத்தை கடுமையாக பின்பற்ற வேண்டும். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்’’ என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘தேர்தல் சமயங்களில் தானாகவே பேனர்கள் அகற்றப்படும். பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் பேனர்கள் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அந்த இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தற்போது பேனர் வைக்க அனுமதி அளிப்பது நகராட்சியின் கீழ் வரவில்லை. பேனர்களை அகற்ற வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தால் உடனே அகற்றப்படும். அனுமதி பெற்று பேனர் வைக்க வேண்டும். ஆனால் தற்போது வைக்கப்படும் பேனர்கள் அனுமதி பெற்று வைப்பதில்லை’’ என்றனர்.