சிவகங்கை நகராட்சி 27-வது வார்டு அதிமுக வேட்பாளர் தன் மீதுள்ள வழக்குகளை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுயேச்சை வேட்பாளர் புகார் அனுப்பி உள்ளார்.
சிவகங்கை நகராட்சி 27-வது வார்டில் போட்டியிடுவதற்காக திமுக சார்பில் நகராட்சி செயலாளர் துரை ஆனந்த், அதிமுக சார்பில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் மாரிமுத்து உட்பட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் குழந்தைசாமி என்பவர் மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் பார்வையாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
அதிமுக வேட்பாளர் மாரிமுத்து பெயரில் 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், அவர் 5 வழக்குகள் மட்டும் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
அதேபோல, மாரிமுத்துவின் மனைவி பரமேஸ்வரியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுவில் தன் மீது வழக்குகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இருவரும் தங்களது வேட்பு மனுவில் குற்ற வழக்குகளை மறைத்துள்ளனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாரிமுத்து கூறிய தாவது:
என் மீது 5 வழக்குகள் நிலுவை யில் உள்ளதாக, மாவட்ட காவல் துறை அலுவலகம் கொடுத்த தகவலைத் தான் வேட்பு மனுவில் காட்டி உள்ளேன். எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்த, திமுகவினர் இதுபோன்று புகார் தெரிவிக்கின்றனர் என்றார்.