தமிழகம்

முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் பலப்பரீட்சை - தூத்துக்குடி மேயர் பதவியை குறி வைக்கும் வாரிசுகள்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற திமுக, அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளிலும் வாரிசுகள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி 60 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நகராட்சித் தலைவராக இருந்த இரா.கஸ்தூரி தங்கம் தூத்துக்குடி மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றார்.

கடந்த 2011-ம் ஆண்டில் முதல் நேரடி மேயர் தேர்தலை சந்தித்தது தூத்துக்குடி மாநகராட்சி. அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்ட சசிகலா புஷ்பா வெற்றிபெற்று மாநகராட்சியின் முதல் மேயரானார். தொடர்ந்து 2014-ம் ஆண்டில் சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2014 செப்டம்பர் மாதம் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுகவைச் சேர்ந்த ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸ் வெற்றி பெற்று மேயரானார். இந்த இடைத்தேர்தலை திமுக புறக்கணித்தது.

அதற்கு பிறகு தற்போது தான் மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடைபெறவில்லை. 60 வார்டுகளுக்கு மட்டும் வரும் 19-ம் தேதி நேரடி தேர்தல் நடைபெறுகிறது. இந்த வார்டுகளில் வெற்றிபெறும் மாமன்ற உறுப்பினர்கள் மார்ச் 4-ம் தேதி நடைபெறும் மறைமுக தேர்தல் மூலம் மேயரை தேர்வு செய்கின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்த முள்ள 60 வார்டுகளில் திமுக 48 வார்டுகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 12 வார்டுகளில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் 20-வது வார்டில் போட்டியிடும் ஜெகன் பெரியசாமி மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவர், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் மகனாவார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவனின் உடன்பிறந்த சகோதரர்.

திமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் ஜெகன் பெரியசாமி, கடந்த 2014 மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த 2017-ல் என்.பெரியசாமி மறைவுக்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆளும் கட்சி என்ற பலம், தந்தை மற்றும் சகோதரியின் செல்வாக்கு ஆகியவை தனக்கு சாதகமாக இருக்கும் என, ஜெகன் பெரியசாமி முழுமையாக நம்புகிறார்.

அதிமுக

மாநகராட்சியின் 59-வது வார்டில் களம் காணும் எஸ்.பி.எஸ்.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ஆவார். இவர் அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சமீப காலமாக அரசியலில் ஆர்வம் காட்டி வரும் ராஜா, தற்போது தான் முதல் முறையாக தேர்தல் களம் காணுகிறார். ராஜாவின் எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு இந்த மாநகராட்சி தேர்தல் அச்சாரமாக அமையும் என சண்முகநாதன் நம்புகிறார். எனவே, மகனின் வெற்றிக்கான அனைத்து வேலைகளையும் அவர் முடுக்கிவிட்டுள்ளார்.

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலையில் வெளியாவதைத் தொடர்ந்து, நாளை முதல் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற போகும் வாரிசு யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT