வேலூர் மாநகராட்சியில் மக்கள் சேவை செய்ய எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மூன்றாம் பாலினத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேலூர் நகராட்சி கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டாவது நேரடி தேர்தலை சந்திக்கிறது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் என பலமுனை தேர்தல் களமாக மாறியுள்ளது. சமூக நீதி குறித்து அதிகம் பேசும் திமுகவில் வேலூர் மாநகராட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கங்கா நாயக் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அதேநேரம், வேலூர் மாநகராட்சி யில் நாம் தமிழர் கட்சி சார்பிலும் 2 மூன்றாம் பாலினத்தினருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி 40-வது வார்டில் ரஞ்சிதா, 41-வது வார்டில் சபீனா என்ற மூன்றாம் பாலினத்தினர் 2 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் தங்கள் வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வேட்பாளர் ரஞ்சிதா, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது ‘‘எங்களுக்கு குடும்பம் எதுவும் இல்லை. மக்கள் எங்களுக்கு வாக்களித்தால் அவர்களின் நலனுக்காக வேலை செய்ய தயாராக இருக்கிறோம். எங்கள் பகுதியில் கரோனா ஊரடங்கால் பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
முதியோர்களுக்கு மருந்து, மாத்திரை வாங்கவும் மருத்துவ மனைக்கு சென்று வரவும் இலவச ஆட்டோ சர்வீஸ் வழங்கவும் நட வடிக்கை எடுப்போம்’’ என்றார்.
41-வது வார்டு வேட்பாளர் சபீனாகூறும்போது, ‘‘எங்கள் வார்டில் இருக்கும் மக்களை எங்கள் குடும்பத்தினராகவே பார்க்கிறோம். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட எங்கள் தரப்பினருக்கு நல்லது செய்ய திட்டமிட்டிருக்கிறோம். எங்கள் வார்டில் அடிப்படை பிரச் சினைகள் எதுவாக இருந்தாலும் அதை சரி செய்ய நாங்கள் முன் நிற்போம்’’ என்றார்.
இவர்களது பொதுவான கோரிக்கையாக இருப்பது எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்பதே.
நாங்களும் மக்கள் மன்றத்தில் நின்று உங்களுக்காக பேசுகிறோம் என தெரிவிக்கின்றனர்.