ஆம்பூரில் பெண்கள் (பொது) வார்டில் ஆண் தாக்கல் செய்த வேட்பு மனுவை பரிசீலனையின் போது ஏற்றுக் கொண்டதாக அதிகாரிகள் அறிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டு களில் கவுன்சிலர் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நகராட்சி அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான ஷகிலா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மணி, முருகானந்தம், ராஜரத்தினம், அலமேலு ஆகியோர் உடனிருந்து மனுக்களை பரிசீலினை செய்தனர்.
இதில், ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு பெண் (பொது) வார்டாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டி ருந்தது. வேட்பு மனு பரிசீலனையின் போது அந்த வார்டில் மொத்தம் 8 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் அனைவருடைய வேட்பு மனுக் களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 35-வது வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தங்கமணி என்ற வேட்பாளருக்கு, தான் வேட்பு மனு தாக்கல் செய்த வார்டு பெண் (பொது) வார்டு என்பது மனு பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு தான் அவருக்கு தெரியவந்தது.
பெண் (பொது) வார்டில் ஆண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததும், தங்கமணி என்ற பெயரை பார்த்து அது பெண்ணாக இருக்கலாம் எனக் கருதி அதிகாரிகளும் பரிசீலனையில் அந்த மனுவை ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்ட விவரம் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தங்கமணியின் வேட்பு மனுவை எடுத்து சரிபார்த்தனர். அதில் அவர் தாக்கல் செய்திருந்த பிரமான பத்திரத்தில் அவருடைய புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததை அப்போது தான் அதிகாரிகள் பார்த்தனர். பெண் (பொது) வார்டில் ஆண் வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததை அப்போது தான் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. சிறிது நேரம் கழித்து 35-வது வார்டில் தங்கமணி தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
வேட்பு மனுவில் புகைப்படம்
வேட்பு மனுவில் வேட்பாளர் களின் புகைப்படம் ஒட்டப்படுவதில்லை.
அவர்கள் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் தான் வேட்பாளர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கிறது.
ஆம்பூர் 35-வது வார்டு பெண் (பொது) என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கல் செய்த வேட்பு மனுவை அப்போதே சரிபார்த்து திருப்பி வழங்காமல், பரிசீலனையிலும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்து பிறகு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கும் அளவுக்கு குழப்பம் ஏற்பட்டது.
இதனால் வேட்பு மனுக்களில் வேட்பாளரின் புகைப்படம் ஒட்ட ஏற்பாடு செய்ய வேண்டுமென சில வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.