தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியில் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களாக இரவு பகலாக நடந்து வந்தது. தொகுதிப் பட்டி யல் இன்று வெளியாகலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா இணைந்து புதிய அணியை அமைத்துள்ளன. இந்த அணியில் தேமுதிக 104 இடங்களிலும், மதிமுக 29, தமாகா 26, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 25 இடங்களிலும் போட்டியிடுகின்றன. எந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காணும் பணி தேமுதிக தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. ஒரே தொகுதியை 3, 4 கட்சிகள் கேட்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. தொகுதிகளை அடையாளம் காணும் பணி இரவு பகலாக நடந்து வந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷ், தமாகா துணைத் தலைவர் பி.எஸ்.ஞான தேசிகன், விசிக தலைவர் திரு மாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு கட்சி சார்பிலும் சுமார் 30 முதல் 35 தொகுதிகள் வரையிலான உத்தேச தொகுதிப் பட்டியல் அளிக்கப்பட்டது. அவற்றில் தாங்கள் எதிர்பார்த்து விடுபட்ட தொகுதிகளை சேர்க்க வேண்டும் என்று தமாகா, விசிக போன்ற கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. நேற்று காலை முதல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறும்போது, ‘‘தொகுதிகளை அடையாளம் காணும் பணி ஓரளவு முடிந்துவிட்டது. நாளைக்குள் (இன்று) தொகுதிப்பட்டியல் வெளியிடப்படும். தொகுதிகளை பங்கிடுவதில் சிக்கல் என்று கூறுவது தவறான தகவலாகும்’’ என்றார்.