சென்னை: பிப்.16-ல் தொடங்கவுள்ள புத்தகக் காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) செயலாளர் எஸ்.கே.முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் காட்சி வரும் பிப்.16-ல் தொடங்கி மார்ச் 6-ம் தேதி தேதி வரை நடைபெறவுள்ளது. 800-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சம் தலைப்புகளின் கீழ், 2 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெறும்.
கரோனா பரவல் எதிரொலி காரணமாக, இந்த ஆண்டு புத்தக காட்சிக்கு வரும் வாசகர்கள் ஆன்லைன் மூலம் தங்களுக்கான டிக்கெட்டைப் பெற்றுக்க கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் டிக்கெட்ட பெற விரும்புவோர், www.bapasi.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறைக்கு வாசகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பல வாசகர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டைப் பெற்றுள்ளனர். பல வாசகர்களிடம் இருந்து தொலைபேசி மூலம் ஆன்லைன் டிக்கெட் தொடர்பான சந்தேகங்களை கேட்கின்றனர். ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்றவர்கள், அதுதொடர்பான குறுஞ்செய்தியை காட்டினாலும் புத்தக காட்சியினுள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதே நேரம் வழக்கம் போல் அரங்கத்தின் வெளியே நேரடியாக டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதே போன்று வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் டிக்கெட்டுக்களை இலவசமாக வழங்கயிருக்கிறோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்தி, பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வாங்கி பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கிறோம். இலவச டிக்கெட் தொடர்பான சந்தேகங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் என்னை தொடர்பு கொள்ளலாம், எனது செல்போன் (94441 59852) எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.