அவிநாசி வட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட 5 கோயில்களுக்கு சொந்தமான ரூ. 14கோடியே 28 லட்சம் மதிப்பிலான, 31 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசிவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களான, முறியாண்டாம்பாளையம் கன்னிமார் கோயில், தொட்டியனூர் முட்டத்துராயர் பெருமாள் கோயில்,தொட்டகாளம்புதூர் விநாயகர் கோயில், தத்தனூர் அடிபெருமாள் கோயில் மற்றும் கருவலூர் தர்மராஜா கோயில்கள் உள்ளன.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் இணை ஆணையரால் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் வருமானம் வரத்தக்க வகையில் நடவடிக்கை எடுப்பதற்காக கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்தனர். அதில் ஆக்கிரமிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் நடராஜ் தலைமையில், திருப்பூர் உதவி ஆணையர் செல்வராஜ், திருப்பூர் தனி வட்டாட்சியர் (அறநிலையத் துறை) கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
நிலம் ஒப்படைப்பு
நிலத்தை ஒப்படைக்காவிட்டால் இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 78-ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதன்பேரில், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே முன் வந்து நிலத்தை ஒப்படைப்பதாக எழுதிக் கொடுத்தனர்.
இதையடுத்து நிலத்தை மீட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மொத்தமாக 31 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.14.28 கோடி என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.