சொத்து மற்றும் குடிநீர் வரி செலுத்தாததால், சேலம் மாநகராட்சி தேர்தலில் 14-வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துஇருந்த அதிமுக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. 14-வது வார்டு வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, திமுக வேட்பாளர் சாந்தமூர்த்தி சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன், “அதிமுக வேட்பாளர் நடேசன் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளவர்களின் பெயரில் சொத்து வரி ரூ.ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 850 மற்றும் குடிநீர் வரி ரூ. 21,444 செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளார். எனவே, அவரது மனுவை நிராகரிக்க வேண்டும்” என்றார். இதையடுத்து, 14-வது வார்டு வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேபோல, “மாநகராட்சி 29-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சத்யாவின் கணவர் மீதுநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதுவேட்பு மனுவில் குறிப்பிடவில்லைஎன்பதால், அவரது வேட்பு மனுவைநிராகரிக்க வேண்டும்” என காங்கிரஸ் வேட்பாளர் கிரிஜா குமரேசன்கூறினார். இதையடுத்து, பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்த, சேலம் தெற்குதொகுதி அதிமுக எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் தலைமையில் அதிமுகவினர் அஸ்தம்பட்டி மண்டலஅலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்துநிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் அங்கு காத்திருந்தனர்.
மீண்டும் மதியம் 14 மற்றும் 29-வது வார்டு வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, 14-வது வார்டு அதிமுக வேட்பாளர் நடேசன் மனு நிராகரிக்கப்படுவதாகவும், அவருக்கு மாற்று வேட்பாளரான பழனிசாமியின் மனு ஏற்கப்படுவதாகவும், 29-வது வார்டு சத்யாவின் மனு ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.