அரவிந்த் பெருமாள் 
தமிழகம்

விடா முயற்சியால் லட்சியத்தை அடைந்தார்; 12 ஆண்டுகள் காவலராக பணியாற்றியவர் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆனார்

செய்திப்பிரிவு

விடாமுயற்சியால் லட்சியத்தை அடையலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாகி இருக்கிறார், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய காவலர் அரவிந்த் பெருமாள்.

திருநெல்வேலி டவுன் மலையாளமேடு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பெருமாள்(34). பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கடந்த 2011-ல் தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தனது ஓய்வில்லா பணிச் சூழல்களுக்கு இடையேயும் சிறந்தஆசிரியராக வேண்டும், பொருளாதாரத்தில் முனைவர் பட்ட ஆய்வுமேற்கொள்ள வேண்டும் என்றலட்சிய தாகத்தை கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

உயர்கல்வி கற்க வாய்ப்பு கேட்டு காவல்துறை உயர் அதிகாரிகளை நாடினார். அவரது முயற்சிக்கும், உத்வேகத்துக்கும் காவல்துறை அதிகாரிகள் தடைபோடவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, ஆய்வை மேற்கொண்டார்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய பொருளாதார ஆய்வை மேற்கொண்டு சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்து தனது மாபெரும் கனவை நனவாக்கியுள்ளார்.

சுமார் 12 ஆண்டுகளாக லத்திபிடித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கபயன்பட்ட அவரது கை, தற்போதுசாக்பீஸ் பிடித்து மாணவ, மாணவியருக்கு கல்வி போதிக்கிறது.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் கூறும்போது, “மாணவர்கள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அந்த லட்சியத்தை கைவிடக் கூடாது. அது கைகூடுவதற்காக உழைக்க வேண்டும். எனது முதல்வகுப்பில் மாணவ, மாணவிகளிடம் இதையே தெரிவித்தேன்.

முதுகலைப் பட்டம் பெற்றுஇருந்த நிலையில் குடும்ப சூழ்நிலையால் காவல் துறை பணியில் சேர்ந்த என்னிடம், சிறந்த ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியம் கனன்று கொண்டே இருந்தது. அதை அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

அரவிந்த் பெருமாளின் மனைவிஏ.பேச்சியம்மாள் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பாகல்லூரியில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

SCROLL FOR NEXT