பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் காரை, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் முற்றுகையிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை நகராட்சிகள், 9 பேரூராட்சிகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம், பல்லடம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்து பேசும்போது, ‘‘கடந்த எட்டு மாதங்களில் தமிழக அரசு மக்களுக்காக கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை பிரச்சாரத்தில் மக்களிடம் எடுத்துரைத்து, அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும்.
மேளதாளங்களுடன் வீதியில் ஊர்வலமாக செல்லாமல், ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். வாக்குச் சாவடிக்குள் பணியாற்றும் கட்சி நிர்வாகிகளே வெற்றியின் ஆணிவேர். வாக்காளர்களை வாக்குகளாக மாற்றுபவர்கள் வாக்குச்சாவடி முகவர்கள். முதல்வர் பங்கேற்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் முதல் பரப்புரை, காணொலி நிகழ்ச்சி மூலம் கோவை மாவட்டத்தில் முதலில் நடைபெறுகிறது. 300 இடங்களில் தலா 1,000 பேர் வீதம் ஒரே நேரத்தில் மூன்று லட்சம் பேர் இந்த பரப்புரையை காண உள்ளனர்,’’ என்றார்.
அமைச்சர் கார் முற்றுகை
கூட்டத்துக்குப்பின் மண்டபத்திலிருந்து அமைச்சர் வெளியே கிளம்பியபோது, அவரது காரை திமுக நிர்வாகிகள் பலர் முற்றுகையிட்டனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில், முழக்கங்களை எழுப்பினர். பல ஆண்டு காலம் கட்சியில் பணியாற்றியும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பத்து நிமிடத்துக்குப்பிறகு அமைச்சரின் காரை போலீஸார் மற்றும் கட்சியினர் மீட்டனர்.