தமிழகம்

ரயிலில் அனுப்பிய சைக்கிள் மாயம்: ரூ.1.93 கோடி இழப்பீடு கேட்ட மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

ரயிலில் அனுப்பிய சைக்கிள் கிடைக்காமல் போனதற்கு ரூ.1.93 கோடி இழப்பீடு வழங்க ரயில்வேக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆர்.மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருமங்கலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு 1.6.2010-ல் ரயிலில் சைக்கிள் ஒன்றை அனுப்பினேன். அந்த சைக்கிள் மயிலாடுதுறைக்கு போய்ச் சேரவில்லை. ரயில்வே சேவை குறைபாட்டால் எனக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. உரிய நேரத்தில் சைக்கிள் எனக்கு கிடைக்காததால் எனது மகனுக்கு விசா எடுக்க முடியவில்லை.

இதனால் மகன் வெளிநாடு செல்வது தடைபட்டது. இதற்காக ரூ.1.80 கோடியும், மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சமும், மேலும் சைக்கிள் இல்லாததால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, காசநோய் பாதிப்பு ஏற்பட்டதற்கு மருத்துவச் செலவு, நீதிமன்றச் செலவு சேர்த்து மொத்தம் ரூ.1.93 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டு ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தேன். அதனை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்து எனக்கு ரூ.1.93 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. ரயில்வே நிர்வாகம் சார்பில் வாதிடும்போது, ‘மனுதாரர் 1-ம் தேதி சைக்கிளை ரயிலில் அனுப்பியுள்ளார். ஆனால், அவர் 8-ம் தேதிதான் சைக்கிளை எடுக்க வந்தார். அதுநாள் வரை சைக்கிளை குடோனில் பாதுகாத்து வைத்ததற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு, சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு அவரிடம் கூறினோம். அதற்கு அவர் உடன்படவில்லை. இதனால் அவருக்கு சைக்கிள் கிடைக்காமல் போனதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல’ எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப் பித்த உத்தரவு:

ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு சரியானது. சைக்கிள் கிடைக்காததால் தனது மகனுக்கு விசா எடுக்க முடியவில்லை. இதனால், அவரால் வெளிநாடு செல்ல முடியவில்லை. இதற்கு இவ்வளவு இழப்பீடு தர வேண்டும் என கேட்பதை அனுமதித்தால் நீதிமன்றம் கேலிக் கூத்தாகக் கருதப்படும்.

சைக்கிள் கிடைக்காததற்கும், காசநோய் வந்ததற்கும் என்ன தொடர்பு உள்ளது? அதற்கு தனியாக மருத்துவச் செலவு கேட்பதை ஏற்க முடியாது. மேலும், ரயில்வே இழப்பீட்டு தீர்பாயத்தின் உத்தரவை எதிர்த்து 2 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் வந்துள்ளார். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT