சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை சார்பில், காவேரிப்பாக்கம் வரலாறு மற்றும் காஞ்சிபுரம் கட்டிடக் கலை குறித்த நூல்கள் வெளியிடப்பட்டன.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், காவேரிப்பாக்கம் வரலாறு, கலைபாரம்பரியம் மற்றும் காஞ்சிபுரத்தின் உள்நாட்டு கட்டிடக் கலை குறித்த வரலாற்றுக் கண்ணோட்டம் ஆகிய நூல்களை இந்து குழுமவெளியீட்டாளர் என்.ரவி வெளியிட்டார்.
‘இந்து’ என்.ரவி சிறப்புரை
தொடர்ந்து, என்.ரவி பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் வணிக ரீதியான புத்தகங்களை வெளியிடுவதற்குத்தான் பதிப்பு நிறுவனங்கள் முக்கியத்துவம் தருகின்றன.
அதேநேரம், வரலாறு தொடர்பான புத்தகங்களுக்கும் நூலகங்களில் இடம் உள்ளதையும், அவற்றுக்கான வாசகர்கள் இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இரு நூல்களிலும், பண்டையகால தென்னிந்திய மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், கட்டிடக் கலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இவை கலாச்சார ரீதியாக நிலவிவரும் இடைவெளியை ஒருங்கிணைக்கும் விதமாக அமைந்துள்ளன.
குறிப்பாக, காவேரிப்பாக்கம் புத்தகம் கலைப்படம்போல உள்ளது. சிறு, சிறு தகவல்களையும் நுணுக்கமாக சேகரித்து, மிகச் சிறப்பாக நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், பழங்கால வரலாறு, இலக்கியம், கட்டிடக் கலை, நோய் தடுப்பு ஆய்வு, போர்கள், பொருளாதார மாற்றங்கள், கோயில்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
தற்போதைய சென்னை அருங்காட்சியத்தைச் சுற்றிய பகுதிகள் முன்பு எவ்வாறு இருந்தன என்பதும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜயநகரம் போன்ற ஆட்சிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் பண்டையகால தென்னிந்தியாவை பற்றிய தெளிவான புரிதலை இந்தப் புத்தகம் வழங்குகிறது.
அதேபோல், காஞ்சிபுரம் கட்டிடக் கலை குறித்த நூலும், இதுவரை அதிகம் பேசப்படாத உள்நாட்டு கட்டுமானங்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்களின் வீடுகள், வாழ்வியல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வாறு என்.ரவி கூறினார்.
தொடர்ந்து, சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை சார்பில் நூலாசிரியர் வி.என்.னிவாச தேசிகனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், அறக்கட்டளைத் தலைவர் நந்திதா கிருஷ்ணன், சி.பி.ஆர். ஆய்வு மைய இணை இயக்குநர் வி.மோகன், நூலாசிரியர் ஜே.சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.