நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம்,ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமூகமாக தேர்தல் நடைபெற கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சுமூகமாகத் தேர்தல் நடைபெற கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பாடி, கொரட்டூர், அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம், ஆவடி காமராஜர் சிலை, திருநின்றவூர் காந்தி சிலை, திருவேற்காடு நகராட்சி, மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், மாதவரம் பால் பண்ணை, எண்ணூர் விம்கோ நகர், எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அப்போது, போலீஸார் பொதுமக்களுடன் கலந்துரையாடி, அப்பகுதியில் உள்ள பிரச்சினைகள், குற்றங்களைப் பற்றி கேட்டறிந்தனர். மேலும், அணிவகுப்பின்போது வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை கண்காணித்தனர்.
அத்துடன், சுமூகமாகத் தேர்தல் நடைபெற பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.