நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில அளவில் திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
மாநில தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி. ராஜா தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் காணொலி வழியாக ஆலோசனை வழங்கி பேசியது:
ஆட்சியின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணியினர் பங்கு இருக்க வேண்டும். அரசு அறிவிக்கின்ற திட்டங்களை கிராமப்புற மக்களிடம் சென்று சேர கவனமாக பணியாற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் திமுக ஆட்சி செய்துள்ளது. இந்தியாவில் யாரும் செய்யாத வகையில் பல திட்டங்களை அறிவித்து செயல் படுத்தப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் இடஒதுக்கீட்டில் உயிர்நீத்தவர்களுக்கு மணிமண் டபம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது எதிரணியினர் பொய் பிரச்சாரம் பரப்புகின்றனர். தகவல் தொழில்நுட்ப அணியினர் உண்மைசெயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
இதில், விழுப்புரம் மத்திய திமுக சார்பில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர்கள் புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இதேபோல் காணொலி காட்சி வாயிலாக செஞ்சியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான்,செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், நகர செயலாளர் காஜா நஜீர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.