ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைக்கும் விளைபொருளுக்கான கடன் தொகையை 80 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களை சேமித்து வைப்பதற்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கிட்டங்கிகள் கட்டப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் புதூரில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் விளை பொருட்களை இருப்பு வைக்கும் வகையில் கிட்டங்கி கட்டப்பட்டுள்ளது. அந்தவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் விளை பொருட்களை இந்த கிட்டங்கியில் வைத்து, அதிக விலை கிடைக்கும் போது விற்பனை செய்கின்றனர்.
இங்கு இருப்பு வைக்கப்படும் விளைபொருட்களுக்கு சந்தை விலையில் இருந்து 50 சதவீதம் விவசாயிகளுக்கு கடன்தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் விலைக்கு விளை பொருட்கள் விற்கப்படும்போது, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடன் தொகையை 80 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “ ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள கிட்டங்கிகளில் வைக்கப்படும் விளை பொருட்களுக்கு, சந்தை விலையில் இருந்து 50 சதவீத தொகை கடன் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே, இயற்கை இடர்பாடுகளால் சோர்ந்து போய் உள்ள விவசாயிகளுக்கு, இந்த தொகையை 80 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும். மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொடுக்கப்படும் கடன் தொகையில், அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை என, உச்சவரம்பு நிர்ணயித்துள்ளனர். ரூ.3 லட்சம்என்ற உச்சவரம்பை தளர்த்தி, விவசாயிகள் இருப்பு வைக்கக்கூடிய பொருட்களின் அளவுக்கு ஏற்ப கடன்தொகை வழங்க வேண்டும்” என்றனர்.