சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நாட்களில், ஆவணமின்றி ரூ.2 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, மாநில தேர்தல் ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா,மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமாரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் நடைமுறைகள் தற்காலிகமானவை. ஆனால், நிரந்தர சட்டங்களுக்கு உட்பட்டே வணிகம் நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்தல் அதிகாரிகள் வணிகர்களுக்கு மிகுந்தசிரமம் கொடுத்து வருகின்றனர்.சட்டத்தை மீறும் அரசியல்வாதிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. வணிகர்களையும், பொதுமக்களையும் அலுவலர்கள் சிரமத்துக்கு உள்ளாக்கி வருகின் றனர்.
வாணியம்பாடியில் வணிகர்கள் வங்கி ஆவணங்களையும், அடையாள அட்டையையும் எடுத்துச் சென்றாலும், வணிகர்கள் கொள்முதலுக்காக கொண்டு செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர்.
ஜிஎஸ்டி வரம்புக்குள் வராமல்,ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரை விற்று வரவு செய்துகொள்ள சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சூழலில், வணிக கொள்முதலுக்காக செல்பவர்கள் குறைந்தது ரூ.2 லட்சம்வரை பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.