சென்னை: மத மாற்றத்தை எதிர்த்து புகார் கொடுப்பவர்கள் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து வருவதாக ஆர்எஸ்எஸ் தென் பாரத செயலாளர் இராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள திம்மையம்பட்டி கிராமத்தில் 2 பெண்கள் கடந்த ஜன.21-ம் தேதி கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதற்குஎதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் ஊர் மக்களோடு சேர்ந்து காவல் துறையிடம் புகார் கொடுத்தார். ஆனால், அந்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கொடுத்த புகாரின்பேரில், கணேஷ் பாபு மீது பொய் வழக்கு பதிவு செய்து நள்ளிரவில் அவரை கைது செய்துள்ளனர்.
மதுரை தெற்கு வாசலில் கடந்த ஜன.31-ம் தேதி ஓர் இடத்தை கிறிஸ்தவ அமைப்பு வாடகைக்கு எடுத்து,மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதை எதிர்த்து ராசாகண்ணு என்பவர் உட்பட 6 பேர் கேள்வி கேட்டதோடு, காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். ஆனால், அதை கருத்தில் கொள்ளாத போலீஸார், சம்பந்தப்பட்ட அமைப்பு கொடுத்த புகாரின்பேரில், நள்ளிரவில் 6 பேரை கைது செய்துள்ளனர்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் மத மாற்றப் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளன. அதை எதிர்த்து கேள்வி கேட்கும் இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுகின்றன.
டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து, பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். தலைமைச் செயலர், முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.
புதுக்கோட்டை, மதுரையில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்வதுடன், அவர்களது குடும்பத்தினரிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட காவல் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய மதமாற்ற தடைசட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்து முன்னணி சென்னை மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன், கைது செய்யப்பட்ட ராசாகண்ணுவின் சகோதரி சித்ரா உடன் இருந்தனர்.