தமிழகம்

மதுவிலக்கு பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை: தமிழருவி மணியன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திமுகவினர் மதுபான கம்பெனிகள் வைத்துள்ளதால் மதுவிலக்கு குறித்து பேச அக்கட்சிக்கு தகுதியில்லை என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் மாற்று அரசியல் பேசும் தகுதியை மக்கள் நலக் கூட்டணி இழந்துவிட்டது. மக்கள் நலக் கூட்டணிக்கு முன்பிருந்த மக்கள் ஆதரவு தற்போது குறைந்துவிட்டது. திமுக, பாமகவின் தேர்தல் அறிக்கையில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன. ஆனால் அவற்றை செயல்படுத்துவது முடியாத காரியம். வரும் 30-ம் தேதி நாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம்.

மதுவிலக்கை ஒரேயடியாக கொண்டுவருவது சாத்தியமில்லை. எனவே, படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்ற காலக்கெடுவை ஜெயலலிதா கூற வேண்டும். மதுவிலக்கு குறித்து பேச திமுகவுக்கு எந்த தகுதியுமில்லை. திமுகவினரிடமிருந்து 56% சாராயமும், 81% பீர் பாட்டில்களையும் தமிழக அரசு வாங்குகிறது. இவர்களை கட்சியிலிருந்து திமுக நீக்க வேண்டும் அல்லது சாராயக் கடைகளை மூட வேண்டும். நெருக்கடி நிலையின்போது கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுவார். ஆனால் கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. கருணாநிதியிடம் கேட்டு மு.க.ஸ்டாலின் தெரிந்துகொள்ள வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டால் அவரை நாங்கள் ஆதரிப்போம் என்றார்.

SCROLL FOR NEXT