திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் விவரங்களை சேகரிப்பதாக கூறி, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை கூட்டமாக கூட்டி, கரோனா தொற்று பரவலுக்கு தனிப்பிரிவு காவல்துறையினர் வழிவகுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மலை நகராட்சி அலுவலகத் தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிகட்ட வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. திமுக, அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி போட்டிக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி மருந்து வழங்கப்பட்டது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மூலம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருபவர்களின் விவரங்களை சேகரிக்கிறோம் என்ற பெயரில், நுழைவு வாயில் முன்பு மேஜையை போட்டுக் கொண்டு, தனிப்பிரிவு மற்றும் எஸ்பிசிஐடி காவல்துறையினர் கூட்டத்தை கூட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நபரிடம் விவரங்களை பெற்றதால், கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு காற்றில் பறந்தது. அவர்களது செயல், தொற்று பரவலுக்கு வழி வகுத்துள்ளது. இவர்கள் கூட்டிய கூட்டத்தால், வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கூட்டத்தை சேர்க்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. அதனை பின்பற்ற வேண்டும் என வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருபவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தினோம்.
அதேநேரத்தில், நுழைவு வாயில் முன்பு கிருமி நாசினி மருந்து மற்றும் வெப்ப நிலை பரிசோதனைக்காக வழங்கப்பட்ட மேஜையை அபகரித்துக் கொண்டு, விவரங்களை சேகரிக்கிறோம் என்ற பெயரில் தனிப்பிரிவு காவல்துறையினர் கூட்டத்தை கூட்டி, தொற்று பரவலுக்கு வழி வகுத்துள்ளனர். கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என அவர்களிடம் கேட்டுக்கொண்டும், அவர்கள் இதனை பொருட்படுத்தவில்லை” என்றார்.