திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்தவர் ரத்திகா (26). வங்கி ஊழியர். இவர்,திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான கோசல்ராம் (35) என்பவருடன் பழகி வந்தார். அதில், ரத்திகாவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகூறி வந்த கோசல்ராம் சிறிது காலத்துக்கு பிறகு ரத்திகாவை பிரிந்து ஜோலார் பேட்டைக்கு வந்தார்.
அவரை தேடி ஜோலார்பேட்டைக்கு வந்த ரத்திகாவை கோசல்ராமின் தந்தை தனபால் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். ஆனால், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கோசல்ராம் வீட்டின் முன்பாக ரத்திகா கடந்த 12 நாட்களுக்கு மேலாக தர்ணாவில் ஈடுபட்டார்.
இதில், கோசல்ராம் குடும்பத்தினர் ரத்திகாவை தொடர்ந்து மிரட்டி வந்ததால் மனமுடைந்த ரத்திகா நேற்று முன்தினம் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ரத்திகா புகார் அளித்தார்.
ஆனால்,அந்த புகார் மனு மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த ரத்திகா திருப்பத்தூர் - புல்லாநேரி சாலையில் அமர்ந்துநேற்று மாலை மறியலில் ஈடுபட்டார். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு, ரத்திகா அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய காவல் துறையினர் அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றனர்.