தமிழகம்

ஆளுநரின் முடிவை ஏற்று நீட் தேர்வு பயிற்சி மையங்களை உடனே தொடங்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

க.சக்திவேல்

கோவை: ஆளுநரின் முடிவை ஏற்று, நீட் தேர்வு பயிற்சி மையங்களை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (பிப்.4) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்த விலக்கு அளிப்பதற்கான, தமிழக அரசின் சட்டத்தை, ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார்.

ஆளுநரின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. நீட் தேர்வு என்பதே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தேர்வால் கிராமப்புற மாணவர்களும், ஏழைகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்குமாறு, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன்படி, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முந்தைய அதிமுக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. இதனாலும், மத்திய பாஜக அரசு, ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை அளித்ததாலும், மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 500-ஆக மாறியுள்ளது.

எனவே, நீட் தேர்வில் அதிகமான தமிழக மாணவர்கள், தமிழ் வழி மாணவர்கள், கிராமப்புற, ஏழை மாணவர்கள் வெற்றிபெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT