கிள்ளியூர் தொகுதியில் குரு, சீடர்களுக்கு இடையே நடக்கும் தேர்தல் யுத்தத்தில் வெல்லப் போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கிள்ளியூர் தொகுதியில் கடந்த இருமுறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ஜான் ஜேக்கப், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமானதும், அதில் சேர்ந்தார். அவருக்கு மேற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப் பட்டது.
விலகினார் வேட்பாளர்
தொடர்ந்து இத்தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப் பட்டார். அவரது மனைவியின் உடல் நலக்குறைவு காரணமாக ஜான் ஜேக்கப்பால் தேர்தலில் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டது. தமாகா சார்பில் புதிய வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இப்போதைய நிலையில் கிள்ளியூர் தொகுதியில் பாஜக சார்பில் பொன்.விஜயராகவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் குமாரதாஸ், அதிமுக சார்பில் மேரிகமலாபாய், காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களில் அதிமுக வேட்பாளர் நீங்கலாக மற்றவர்கள் அனைவரும், ஒருவரை பின்பற்றி, ஒருவர் என அரசியலுக்கு வந்தவர்கள் என்பதால் இத்தொகுதி தேர்தல் முடிவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். பாஜக வேட்பாளர் பொன்.விஜயராகவன், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக இருந்த பொன்னப்ப நாடாரின் மகன். இவரது குடும்பப் பின்னணி இவருக்கு பலம் சேர்க்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாரும் பொன்னப்ப நாடாரின் பேரன் முறையாக உள்ளதால் குடும்ப பின்னணி வாக்குகள் யாருக்கு கைகொடுக்கும் என தெரியாத நிலை உள்ளது.
குரு - சீடர்கள்
1977, 1980-ம் ஆண்டுகளில் ஜனதா கட்சியின் சார்பில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் பொன்.விஜயராகவன். அப்போது அவருடனே இருந்து அரசியல் படித்தவர் குமாரதாஸ். தொடர்ந்து ஜனதா தளம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு 3 முறை குமாரதாஸ் வெற்றி பெற்றார். இடையில் 1989-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே பொன்.விஜயராகவன் வெற்றி பெற்றார். தொடர்ந்து அரசியலில் இருந்து நீண்டகாலம் ஒதுங்கியே இருந்த பொன்.விஜயராகவன் பாஜகவில் சேர்ந்து, இப்போது வேட்பாளராக களத்தில் உள்ளார்.
குமாரதாஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த காலக் கட்டங்களில் அவரை பின்பற்றி, அவர் நிழலில் அரசியல் செய்தவர் ஜான் ஜேக்கப். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் விஸ்வரூப வளர்ச்சியும் பெற்றார். கடந்த இரு முறை கிள்ளியூர் தொகுதியின் எம்.எல்.ஏவும் ஆனார். இந்நிலையில் தற்போது மீண்டும் தமாகா சார்பில் போட்டியிட குமாரதாஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்
2007 காலக்கட்டத்தில் கிள்ளியூர் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் ஆதரவுடன் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரானார் வழக்கறிஞர் ராஜேஷ்குமார். ஜான் ஜேக்கப், தமாகாவுக்கு சென்றதையடுத்து, தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட ராஜேஷ் குமார் வாய்ப்பு பெற்றுள்ளார்.
இப்படியாக, கிள்ளியூர் தொகுதியில் குரு, சீடர்களுக்கு இடையே நடக்கும் இந்த தேர்தல் யுத்தத்தில் வெல்லப் போவது யார் என்பதை அறிய கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.