திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் விதிகளை மீறி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் தலைமையில் 3 கார்களில் வந்து திமுகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
தி.மலை நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்தமாதம் 30-ம் தேதி முதல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும்என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடத்தில் இருந்து, 100 மீட்டர் முன்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள் ளது.
தி.மலை நகராட்சி அலுவலகம்நுழைவு வாயில் முன்பு தடுப்புகளை ஏற்படுத்தி, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வேட்பு மனுவுடன் வருபவரை மட்டுமே அனுமதிக்கின்றனர். காரில் வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களை முன்மொழி வருபவர்களை, நுழைவு வாயிலில்தடுத்து நிறுத்தி, தேர்தல் நடத்தை விதிகளின்படி கார்களை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். அதேபோல், இரு சக்கர வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. இரு சக்கர வாகனங்களில் வரும் நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், அவர்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகே அனுதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும், மாநில திமுக மருத்துவரணி துணைத் தலைவருமான கம்பன் தலைமையில் 39-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வே.நிர்மலா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கம்பன், திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக வேட்பாளர் ஆகியோர், தேர்தல் நடத்தை விதிகளை மீறி 3 கார்களில் வந்தனர். அவர்களது கார்கள் வருவதை பார்த்ததும், நகராட்சி நுழைவு வாயில் முன்புஇருந்த தடுப்புகளை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அகற்றினர். இதனால், அவர்களது 3 கார்களும், நகராட்சி அலுவலகம் முகப்புவரை தடையின்றி சென்றது. பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்ததும், கார்களில் திமுகவினர் புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பார்த்தசாரதி கூறும்போது, “தேர்தல் நடத்தை விதிகளின்படி, நகராட்சி அலுவலகம் உள்ளே வரை வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கார்களில் வருவதற்கு அனுமதி கிடையாது. 100 மீட்டர் இடைவெளியில் கோடு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் 3 கார்களை உள்ளே அனுமதித் துள்ளனர். நகராட்சியில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர், அலுவலகம் வரை காரில் வந்ததும், பின்னர் அலுவலகம் உள்ளே சக்கர நாற்காலியில் வந்து பணியாற்ற வேண்டும். ஆனால், அவர் வந்த காரையும் தடுத்து நிறுத்தி உள்ளே செல்வதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. என்னுடைய காரையும் உள்ளே விட மறுத்தனர். அதேநேரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி 3 கார்களை காவல்துறையினர் அனுமதித்துள்ளது தவறாகும்” என்றார்.
அனுமதி பெற்றுள்ளோம்
இது தொடர்பாக திமுக மருத்துவர் அணி மாநில துணைத் தலைவர் கம்பனை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் உள் பகுதி வரை காரில் வருவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அனுமதி பெற்றதால்தான் காரில் உள்ளே வந்தோம்’ என தெரிவித்தார்.