திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில், இன்று திருச்சி மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பகுதிகளில் களைக் கட்டியது.
திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 401 வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் பிப்.19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,262 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி தொடங்கியது.
இதனிடையே, திருச்சி மாநகரில் வேட்புமனு தாக்கல் செய்ய மாநகராட்சியின் 4 கோட்ட அலுவலகங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், வேட்பாளர்களை அறிவிப்பதில் முக்கிய அரசியல் கட்சிகள் தாமதம் செய்ததால், தொடக்க நாட்களில் சுயேச்சைகள் மட்டும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனால், வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் வழக்கம் போல் சாதாரணமாகவே காணப்பட்டன.
முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் நாளையுடன் முடிவடைவதால், இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவாளர்கள் குவிந்ததால், வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிகள் களைக் கட்டின. வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போதும், தாக்கல் செய்துவிட்டு திரும்பும்போதும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அவர்களை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர்.
வேட்புமனு தாக்கல் செய்ய ஆதரவாளர்கள் புடைசூழ வந்தாலும், அலுவலக வளாகத்துக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய 3 பேரை மட்டுமே போலீஸார் அனுமதித்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஆதரவாளர்களால் அரியமங்கலம், ஸ்ரீரங்கம், கோ-அபிஷேகபுரம் ஆகிய அலுவலகங்களுக்கு வெளியே உள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. 4 கோட்ட அலுவலகங்களுக்கு வெளியேயும், அலுவலகம் அமைந்துள்ள சாலைகளிலும் போலீஸார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.