தமிழகம்

மதிமுக, அமமுக, நாம் தமிழர், மநீம கட்சிகளுக்கு பொது சின்னம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

இதில், திமுகவுடன் கூட்டணிஅமைத்து மதிமுக போட்டியிடுகிறது. இக்கட்சி தற்போது பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சியாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தபோது, பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்தில் மதிமுக விண்ணப்பித்திருந்தது. அதை ஏற்று, அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அமமுக பொது சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தது. அதை ஏற்று, அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கு மாநிலதேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல, நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னமும் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT