தமிழகத்தில் 2021-ம் ஆண்டு பரவிய கரோனா இரண்டாவது அலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு 179 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று முதல் மற்றும் இரண்டாவது அலையைத் தொடர்ந்து மூன்றாவது அலை பரவி வருகிறது. தமிழகத்தில் முதல் மற்றும் மூன்றாவது அலையைவிட தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாகவே இருந்தது. பலர் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்ஸ்களிலேயே உயிரிழந்த நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிலையில், தொற்றின் இரண்டாவது அலையின்போது கர்ப்பிணிகள் உயிரிழப்பு தொடர்பான ஆய்வை பொது சுகாதாரத்துறை நடத்தியது.
அதில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 179 கர்ப்பிணிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக தொற்று உச்சத்தில் இருந்த மே மாதத்தில் 111 கர்ப்பிணிகள் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தமிழகத்தில் இரண்டாம் அலையின்போதுதான் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க நிலையில் இருந்தது. முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உயிரிழப்புகள் குறைந்தன.
இதுவரை 6.33 லட்சம் கர்ப்பிணிகள், 5.02 லட்சம் பாலுாட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு உயிர் பாதுகாப்பு இருப்பதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். தற்போது, தொற்றின் மூன்றாவது அலை பாதிப்பும் குறைந்து வருகிறது” என்றனர்.