திருக்கழுக்குன்றத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வினர் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு முகக்கவசம் வழங்கினர். 
தமிழகம்

திருக்கழுக்குன்றத்தில் முகக்கவசம் வழங்கி திமுகவினர் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட உள்ள திமுகவினர் குடியிருப்பு பகுதிகளில் பிரச்சாரத்தின்போது குடும்பத்தினர் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தேர்தலில் போட்டியிட உள்ள திமுக, அதிமுகஉள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்புமனுத் தாக்கலுக்குமுன்னதாகவே சமுக வலைத்தளங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், குடியிருப்புகளுக்கு நேரில் சென்று வாக்கு சேகரிக்கும் திமுகவினர் குடியிருப்பில் வசிக்கும் நபர்களிடம் குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனக்கூறி, 50 எண்ணிக்கையிலான முகக்கவசங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முகக்கவசங்கள் இலவசமாகக் கிடைப்பதால், திமுகவினர் பிரச்சாரத்துக்கு வருவதை அறிந்தால் அப்பகுதி வாசிகள் குடியிருப்புகளை விட்டு வெளியே வந்து நின்று முகக்கவசம் பெற்றுச் செல்கின்றனர்.

இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் திமுக வட்டாரங்கள் கூறும்போது, ‘‘வாக்கு சேகரிப்புக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணியாதநபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குடும்பத்தினருக்கும் சேர்த்து முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்" என்றனர்.

SCROLL FOR NEXT