பெரும்பாக்கம்: பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகம்மாள் (40). இவர் பாரிமுனையில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பெரும்பாக்கம் பேருந்து நிலையத்தில் பாரிமுனை செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தார். 5.10 மணிக்குப் புறப்படவேண்டிய பேருந்தை 5.30 மணியாகியும் எடுக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஓட்டுநரிடம் கேட்டபோது ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநருக்கும் முருகம்மாளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் முருகம்மாளை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் முருகம்மாள் மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட பொது மக்கள் பேருந்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரும்பாக்கம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுநர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, "பேருந்து ஏறும் பொதுமக்களை ஓட்டுநர், நடத்துநர் தரக்குறைவாகப்பேசுவது தொடர் கதையாக நடந்துவருகிறது. ஓட்டுநர், நடத்துநர்கள் பயணிகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனப் போக்குவரத்து அதிகாரிகள் கற்றுத்தர வேண்டும்" என்றனர்.