விழுப்புரம் நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை முடிவடைய உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் சில கோரிக்கைகளை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளனர். அவை விழுப்புரம் நகர மக்களின் நீண்ட நாள் ஆதங்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவை பின்வருமாறு:
விழுப்புரம் நகர்ப் பகுதியில் தெருவிளக்குகள் பல பகுதிகளில் எரியவில்லை. அதை முழுவதுமாக சரி செய்ய வேண்டும். அதே போன்று பல பகுதிகளில் இன்னும் தெரு விளக்கு இல்லாமல் உள்ளது. அங்கே தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். நகரத்தின் முக்கிய பகுதிகளில் மாடுகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.
குப்பைகளை அனைத்து வீடுகளிலும் சரியான முறையில் வாங்க வேண்டும். நகரத்தில் உள்ள பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை உள்ளது. தூய்மை பணியாளர் வீடுகளில் வாங்கும் குப்பைகளில் உள்ள பேப்பர், கவர்களை சாலையிலே எரிக்கவும் செய்கிறார்கள்.நகரத்தில் பல பகுதிகளில் நாய், பன்றிகளின் தொல்லைகள் அதிகமாக உள்ளன.
பாதாள சாக்கடை பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. நகராட்சி சார்பாக கட்டப்பட்ட கழிவுநீர் கழிப்பிடம் சில பகுதிகளில் செயல் படாமல் உள்ளது. நகராட்சி பூங்காவை சீரமைத்து தர வேண்டும். நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும்.
பேருந்து நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அதை இடமாற்றம் செய்ய வேண்டும். நகரத்தில் சிலர் அவர்களின் வீடுகளின் முன்னே நகராட்சி அனுமதி பெறாமல் வேகத்தடை பெரியளவில் அமைத்து உள்ளனர். அதனை நகராட்சி சரி செய்ய வேண்டும். மக்கள் எளியமுறையில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அல்லது ஆப்ஸ் ஒன்றை உருவாக்க வேண்டும். நகரத்தில் அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ளது. அதை சரி செய்யும் விதமாக ரீங் ரோடு அமைக்க வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெற்றி பெறும் வேட்பாளர்கள் இப்பிரச்சினைகளை சரி செய்து தரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இக்கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.