தமிழகம்

கச்சத்தீவு தாரை வார்ப்பில் திமுகவுக்கு பங்கு இல்லை: ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில்

செய்திப்பிரிவு

இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டதில் திமுகவுக்கு பங்கு இல்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதல்வர் ஜெயலலி தாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித் தார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் தனது பிரச்சாரத்தை நேற்று மதுரையில் இருந்து தொடங்கினார். ஒத்தக்கடை, மேலூரில் திமுக வேட் பாளர்கள் பி.மூர்த்தி, அ.பா.ரகுபதி ஆகியோரை ஆதரித்து வேனில் இருந்தவாறு அவர் பேசியதாவது:

திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமல், ஊழலை அடியோடு ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம், உடனுக்குடன் மக்கள் தேவைகளை நிறைவேற்ற சேவை உரிமைச் சட்டம், இளைஞர்களுக்கு வேலை தரும் வேலை உரிமைச் சட்டம், கல்விக் கடன் ரத்து என 501 உறுதிமொழிகள் தரப்பட்டுள்ளன. 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்துவதை, மாதம் ஒரு முறையாக மாற்றுவதால் 60 சதவீதம் வரை செலவு குறையும். ஜல்லிக்கட்டை உறுதியாக நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

அதிமுக 2011-ல் ஆட்சிக்கு வந்த தும் மின் கட்டணம், பேருந்து கட் டணம், ஆவின் பால் விலை உயர்த் தப்பட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கிரானைட், தாதுமணல், மின் கொள் முதலில் தலா ரூ.1 லட்சம் கோடிக் கும் மேலும், சத்துணவுக்கு முட்டை வாங்குவதில் ஊழல், ஆவின் பாலில் கலப்பட ஊழலும் நடைபெற்றது.

முதல்வர் கோட்டைக்கே போகாத அளவுக்கு அரசு நிர்வாகம் மோசமானது. இத்தகைய பேராபத்தில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற திமுக ஆட்சி அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து மதுரை தெற்கு தொகுதி திமுக வேட் பாளர் எம்.பாலச்சந்திரனை ஆத ரித்து முனிச்சாலையில் மு.க.ஸ்டா லின் பேசும்போது, ‘‘அருப்புக் கோட்டையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, இலங்கைக்கு கச்சத் தீவை தாரை வார்த்தது திமுகதான் என ஒரு அப்பட்டமான பொய் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கச்சத்தீவு தேசிய அளவில் உள்ள ஒரு பிரச்சினை. திமுக ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவு கைமாற வில்லை. நெருக்கடி காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக் கப்பட்டது.

அந்த நேரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. திமுக ஆட்சியின்போது சட்டப்பேரவையில், கச்சத்தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றினோம்” என்றார்.

SCROLL FOR NEXT