திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

நெல்லை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட திமுகவில் முக்கிய நிர்வாகிகள், வாரிசுகளுக்கு ‘சீட்’ மறுப்பு: அனைத்து வார்டுகளிலும் அதிமுக போட்டி

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று மேயராக தேர்வு செய்யப்படுபவர் யார் என்ற எதிர்பார்ப்பு மாநகர் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப் பாளையம் மண்டல அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக சார்பில் திருநெல்வேலி மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக அறிவித்துள்ள வேட்பாளர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்கள். பெண்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேயர் பதவியை எதிர்பார்த்து முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏ.எல்.எஸ். லட்சுமணன், மாலை ராஜா, சட்டப் பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பனின் மகன் பிரபாகரன், முன்னாள் மண்டல தலைவர் சுப. சீத்தாராமனின் மகள் அமுதா, அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் இணைந்த முன்னாள் மேயர்கள் விஜிலா சத்தியானந்த், புவனேஸ்வரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் திமுகவில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப் படவில்லை.

அதிமுகவில் தச்சை வடக்கு பகுதி செயலாளர் கே. மாதவ ராமானுஜம், பாளையங்கோட்டை வடக்கு பகுதி செயலாளர் டி.ஜெனி, திருநெல்வேலி மேற்கு பகுதி செயலாளர் என். மோகன், திருநெல் வேலி கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.காந்தி வெங்கடாசலம், மேலப்பாளையம் மேற்கு பகுதி செயலாளர் எஸ்.எஸ். ஹயாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த வார்டுகளில் மக்களுக்கு பழக்கமானவர்களை களத்தில் நிறுத்தியிருப்பது கூடுதல் பலத்தை அளிக்கும் என்று அதிமுகவினர் நம்புகின்றனர்.

மாநகராட்சியில் 55 வார்டுகளிலும் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்களை ஒதுக்கியிருக்கிறது. மாநகராட்சியில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக 48 இடங்களில் மோதுகின்றன.

SCROLL FOR NEXT