தமிழகம்

ராமஜெயம் கொலை வழக்கு | சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்  உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் சிபிஐ-க்கு உதவ, தமிழக காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் வருடம் மார்ச் 29-ல் நடைபயிற்சி சென்ற தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கொலையாளிகள் யாரும் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்த்து.

சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து கொலை செய்யபட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனபதால், மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி, விசாரணை அதிகாரி சரியான கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும், விசாரணைக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பட்டியலை வழங்குவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறை அதிகாரிகளின் பட்டியல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT