அம்பேத்கர் பற்றிய மறுவாசிப்பு அவசியம். இக் காலகட்டத்தில், அதுவே பட்டியலின மக்களின் நிலையையும், அவர்கள் மீது மற்றவர்களுக்கு உள்ள மனநிலையையும் மாற்றும் என ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தெரிவித்துள்ளார்.
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கோவை வடகோவையில் டாக்டர் அம்பேத்கர் 125-வது பிறந்த நாள் தமிழ் மாநில சிறப்புக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கே.சந்துரு பேசியதாவது:
1968-ல் கீழ்வெண்மணியில் 44 தலித் வேளாண் கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக ஊடகங்களில் பெரிய அளவில் வெளிவரவில்லை. ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அந்த செய்தி வெளியானது. எனது மாணவப் பருவத்தில் நிகழ்ந்த இச் சம்பவம், பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் மனச்சாட்சியை தொட்டு எழுப்பாத சம்பவம் இப்போது நிகழ்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இல்லாத நிலை பல சம்பவங்களுக்குப் பிறகு மக்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் எதிர்வினைகளும் இன்று அதிகரிக்கவே செய்துள் ளன. இந்தியாவில் 5-ல் 1 பங்கு மக்களுக்கு ஜாதி ரீதியாக ஜன நாயக உரிமை மறுக்கப்படுகிறது. 20 சதவீத மக்கள் 2-ம் கட்டத்திலேயே வைக்கப்பட்டுள்ளனர். உண்மை யான பிரச்சினையை பார்க்காமல் விட்டுவிட்டால், பிரச்சினை முடிந்து விடும் என்ற மனநிலை பலருக்கும் ஏற்பட்டு வருவதும் இதற்கு ஒரு காரணம்.
அரசியலை பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் கல்வி நிறுவனங்களிலும் இன்று மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. சென்னை ஐஐடி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திலிருந்து தொடங்கிய இப் பிரச்சினை ஹைதராபாத், ஜேஎன்யு வரை பரவியது. மாணவர்களின் செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றால் அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஜேஎன்யு மாணவர்கள் இந்திய, உலக மக்கள் அனைவரின் பிரச்சினைகளுக்காகவும் போராடு கிறார்கள். ‘கால் வலித்தால்கூட நடந்துவிடலாம். தலையில் வலித்தால் என்ன செய்ய முடியும்’ அதுதான் டெல்லியில் நடந்தது; தலைநகரில் உள்ள அரசுக்கு நெருக்குதலைக் கொடுத்தது.
அம்பேத்கரை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமானால், அவரது எண்ணங்களையும், எழுத்துகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன் படுத்துவதாகக் கூறுகிறார்கள். அவற்றை கண்டுபிடித்து களைவது தான் நீதிமன்றங்களின் பணி. பிரச்சினை உள்ளது என்பதற் காக அச்சட்டங்களை புறக்கணிக் கக்கூடாது.
மக்கள் மன்றம்
உடுமலை ஆணவக் கொலைக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பதிவிடுவதைப் பார்க்கும்போது, எந்த மாதிரியான சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்று தோன்று கிறது. சாதிய பிரச்சினைகளை வெறுமனே ஒதுக்கிவிட முடியாது. அதில் வாக்கு வங்கி யும் அடங்கியிருக்கிறது. அனைத்து சமூகக் கேடுகளையும் நீதிமன்றங் களே சரிசெய்துவிட முடி யாது. மக்கள் மன்றங்கள்தான் தீர்வைத் தரும். இவ்வாறு அவர் பேசினார்.