சென்னை: பத்திரப் பதிவின்போது ஆள்மாறாட்டம் மூலம் முறைகேடு பதிவுகள் நடப்பதை தடுக்க, ஆதார் வழி அங்கீகாரம் பெறும் நடைமுறை முதல்கட்டமாக திருநெல்வேலி, சேலத்தில் அனைத்து பதிவு அலுவலகங்களிலும் அமல்படுத்தப் படுகிறது.
தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. பதிவுத் துறையில் ‘ஸ்டார் 2.0’ என்ற மென்பொருள் மூலம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பத்திரப் பதிவுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் வரிசைக்கிரமமாக பதிவுகள் செய்து, அன்றே பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
பதிவுத் துறையில் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு, ஆதார் எண்அவசியம் என அறிவித்திருந்தாலும், அதிலும் முறைகேடுகள் செய்து, போலி ஆதார் உள்ளிட்டவற்றை தயாரித்து பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை அதிகரித் துள்ளது.
இதைத் தடுத்து, போலி பதிவுகளை மேற்கொள்ளும் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின்ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சமீபத்தில் பத்திரப் பதிவில் ஆள்மாறாட்டம் நடந்தது. அதேபோல, தமிழகத்தின் பல்வேறு பதிவு அலுவலகங்களில் ஆள்மாறாட்ட பதிவுகள் நடைபெற்று, அதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதும் அதிகரித்து வருகிறது.
இதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட இடம் யாருடையது என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்றை பெற அறிவுறுத்த வேண்டும் என்று வருவாய் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தவிர, ஆள்மாறாட்டத்தை தடுக்க, ரேஷன் கடைகளில் உள்ளது போல, ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவை சரிபார்க்க வேண்டும் என்று சார்பதிவாளர்கள் வலியுறுத்தி வந்த னர்.
இந்நிலையில், இதற்கான நடவடிக்கையில் தற்போது பதிவுத்துறை இறங்கியுள்ளது. ஏற்கெனவே, கடலூர் மண்டலத்தில் திண்டிவனம், புதுச்சத்திரம் ஆகிய இடங்களில் சோதனை முறையில் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், தற்போது, சேலம்,திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் இந்த நடைமுறையை விரிவுபடுத்த பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதாவது, இத்திட்டத்தை விரிவுபடுத்த ஏதுவாக, உடனடியாக அந்தந்த மண்டலங்களுக்கான சேவைபொறியாளர்களை தொடர்பு கொண்டு, புதிய கணினியை தேர்வுசெய்து, தேவையான மென்பொருளை நிறுவவும் பதிவுத் துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பதிவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பத்திரப் பதிவின்போது நடைபெறும் ஆள்மாறாட்டத்தை தடுக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்தஆண்டில் 209 பதிவு அலுவலகங்களில் விருப்ப அடிப்படையில் ஆதார் வழி அங்கீகாரம் பெறும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்போது சேலம், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது கட்டாயம் ஆக்கப்படவில்லை.
சொத்தை எழுதி வாங்குபவர் விருப்ப அடிப்படையில், சொத்தை எழுதிக் கொடுப்பவர், சாட்சிகள் இருவர் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும். அதன்பிறகு, விரல் ரேகை பதிவு சரிபார்க்கப்பட்டு, ஆதார் ஆணையத்தில் இருந்து அங்கீகாரம் வந்ததும், பதிவு செய்யப்படும். இதன்மூலம் ஆள் மாறாட்டம் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.